தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. கடந்த காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் இந்த முறை படுதோல்வி அடைந்தது அக்கட்சியினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள பெருவாரியான மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. அதே போல் தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக இடங்களில் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க தவறி விட்டதாக சொல்கின்றனர். 27 மாவட்டக் கவுன்சிலர்களில் 13 மாவட்டக்கவுன்சிலர்களை திமுகவிடம் பறிகொடுத்தது. ஊராட்சி ஒன்றிய இடங்களில் திமுக 60 சதவீதத்துக்கு மேல் கைப்பற்றியுள்ளது. எப்பொழுதும் மேற்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வலுவாக இருக்கும் அதிமுக, இந்த முறை தென்மாவட்டங்களில் பலவற்றை இழந்துள்ளது.
அதே போல் அதிமுக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோற்றாலும் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் எடப்பாடி தனது செல்வாக்கை கட்சியில் நிரூபித்துள்ளார் என்று கூறுகின்றனர். அதோடு வர இருக்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலிலும் வேட்பாளர்களை எடப்பாடியே தேர்வு செய்ய இருப்பதாக கூறுகின்றனர். இதனால் கட்சியில் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு குறைந்து வருவதால் அவரது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்குமா என்ற அதிருப்தியும் நிலவி வருகிறது.