விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் வங்கிக் கடன் சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தள்ளுபடி செய்ததாக, ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே அண்மையில் தாக்கல் செய்த மனு ஒன்றில், பிப்ரவரி 16- ஆம் தேதி வரை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். ரிசர்வ் வாங்கி இதற்கு அளித்த பதிலில் ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, "வேண்டுமென்றே கடனைத் திருப்பி அளிக்காதவர்களின் கடன்கள் தள்ளுபடியா? இவர்களெல்லாம் பாஜகவுக்கு நெருக்கமான நண்பர்கள். எனவே வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை மக்களவையில் வெளியிடாமல் பாஜக மறைத்தது" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜகவின் எச்.ராஜா கடுமையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில், இந்த நாட்டின் துரதிருஷ்டம் ராகுல் போன்ற ஞான சூனியம் எதிர்க்கட்சித் தலைவர் ஆக இருப்பதும் அவரது உளரல்களைச் சிரமேற்கொண்டு பரப்பும் பொறுப்பற்ற ஊடகங்களும். என்றும், இம்மாதிரி பொய் பரப்ப ஒருவர் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது வடிகட்டிய பொய்யனாக இருக்க வேண்டும் என்றும், Write-off க்கும் waiver க்கும் வித்தியாசத்தைப் படித்துத் தெரிந்து கொண்டு பின் ஊடகங்களில் கேள்வி கேட்பது அறிவுடைமை என்றும் குறிப்பிட்டுள்ளார். எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.