
அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. அப்பொழுது இருந்தே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இருப்பினும் இரு தரப்பு தலைவர்களும் கூட்டணியில்தான் உள்ளோம் எனத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுக்க, கூட்டணி எல்லாம் மேலே உள்ள டெல்லி தலைவர்கள் எடுக்கும் முடிவு தமிழக பாஜக தலைவர் சொல்வதெல்லாம் எடுபடாது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது சென்னையில் சி.வி. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''எங்களுக்கு பாஜக என்பது வேறு; அண்ணாமலை என்பது வேறு. அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். மீண்டும் மோடி பிரதமர் ஆவது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. அதிமுக பிடிக்கவில்லை என்றால் அண்ணாமலை விலகிக் கொள்ளலாம். ஜெயலலிதாவை பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. இதுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவோ; சட்டமன்ற உறுப்பினராகவோ; ஒரு கவுன்சிலராக கூட பதவி வகிக்காதவர். இன்றைக்கு அவர் மீது நாங்கள் சொல்லவில்லை அவரது கட்சியை சேர்ந்தவர்களே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார்கள்.
சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள்; கொலை கொள்ளை கற்பழிப்பு செய்பவர்கள்; ஏழை மக்களை ஏமாற்றி பண மோசடி செய்தவர்களை பணம் பெற்றுக் கொண்டு கட்சியில் சேர்த்து அவர்களுக்கு பொறுப்பு வழங்கிய இப்படிப்பட்ட ஒரு தரம் கெட்டவர் அண்ணாமலை. ஜெயலலிதா யாரையும் சென்று பார்த்ததில்லை. ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி முதல் மன்மோகன் சிங் வரை அவரைத் தேடி வந்து சந்தித்தனர். அப்படி ஒரு ஆளுமை மிக்க தலைவர் அவரைப் பற்றி பேசுவதற்கு இந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எந்த விதை யோக்கியதையும் இல்லை'' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.