அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் தொடர்ந்து தெரிவித்து வந்தாலும் அவ்வப்போது சில மாறுபட்ட கருத்துகளால் இருவருக்கும் இடையே முரண் என்பது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,“அண்ணாமலையைப் பற்றி ஏன் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். இப்படிப் பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். நீங்கள் அவரைப் பற்றி பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. என்ன நடக்கும் ஏது நடக்கும் என்பது தெரியும். அவர் பேட்டி கொடுத்து பெரிய ஆளாகப் பார்க்கிறார். தயவு செய்து அவரது கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்.
கட்சியில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படிப்பட்டவர்களைப் பற்றிக்கேட்டால் நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து தன்னை முன்னிலைப் படுத்த வேண்டும். இப்படியெல்லாம் செய்கிறார். நீங்கள் 10 கேள்விகள் கேட்கிறீர்கள். இதற்கு எங்களைப் போல் உள்ள தலைவர்கள் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். தயவு செய்து இனிமேல் கேட்க வேண்டாம். முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்'' எனறார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின்னால் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''அண்ணாமலை அரசியல் முதிர்ச்சியற்றவர். அரசியலைப் பொறுத்தவரை அவர் ஒரு கத்துக்குட்டி. அவருடைய அரசியல் அனுபவம் என்ன வெறும் இரண்டு வருடங்கள் தான். 50 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு அரசியல் அனுபவம் உள்ளது. எந்த காலத்திலும் எதற்காகவும் அதிமுக பயப்பட வேண்டியதில்லை. அதிமுகவை பாஜக விமர்சிப்பது வளர்த்த கிடாவே மார்பில் பாய்வது போன்றது. கிடாவாக இருந்தாலும் ஆடாக இருந்தாலும் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம். கூட்டணியிலிருந்து கொண்டே மாறுபாடாக பேசக்கூடாது'' என தெரிவித்தார்.
மேலும் ஓபிஎஸ் நடத்தக்கூடிய மாநாடு குறித்த கேள்விக்கு, ''ஓபிஎஸ் அணி மாநாடு நடத்துவது ஆண்டிகள் கூடி மாநாடு நடத்துவது போன்றது'' என்றார்.