அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா... என்ற நடிகர் கவுண்டமனியின் ஜோக் இப்போதும் லைவ்வாக உள்ளது. அதற்கு உதாரணம் நம்ம அமைச்சர் செங்கோட்டையன் தான் என வெளிப்படையாகச் சொல்லி சிரிக்கிறார்கள் ஈரோடு மாவட்ட ர.ர.க்கள்.
மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையிலிருந்து இன்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் அணையில் இருந்த ஷட்டர் பட்டனை ஆன் செய்து தண்ணீர் திறந்து வைத்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "இப்போது நடைபெற்று வரும் நமது மாண்புமிகு முதலமைச்சர் ஆட்சியில்தான் பவானிசாகர் அணை மூன்று முறை நிரம்பியிருக்கிறது. நமது முதல்வர் மிகவும் ராசியான முதல்வர்" என எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்டியதோடு, "விவசாயிகளின் நலன் கருதியே குடிமராமத்துப் பணிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
மேலும், பத்தாம் வகுப்பு மதிப்பெண் வெளியீட்டில் எந்தவித குளறுபடியும் நடக்கவில்லை. முதலமைச்சர் அறிவித்தது போல் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு அரையாண்டுத் தேர்வு மற்றும் அவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவைகளைக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதது. மாண்புமிகு முதல்வரின் வழிகாட்டுதல் படியே சிறப்பாக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது" எனக் கூறியபடியே வணக்கம் போட்டு அவ்விடத்திலிருந்து செங்கோட்டையன் புறப்பட "அரசியலுக்கு எடப்பாடியாரை கொண்டு வந்ததே இவர்தான்.
தனது ஜூனியரான எடப்பாடி அரசியலில் சகல வித்தையும் செய்து இப்போது எல்லோருக்கும் மேலே முதல்வராக அமர்ந்துள்ளார். காலத்தின் கோலம் பாருங்க அவருக்குக் கீழே பணியாற்றுவது மட்டுமல்ல அவரை அம்மா ரேஞ்ச்சுக்கு புகழ வேண்டிய கட்டாயமும் அண்ணன் செங்ஸ்க்கு ஏற்பட்டுவிட்டது என அவர் காதுபடவே ர.ர.க்கள் கின்டலாக பேசி மகிழ்ந்தனர்.