தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்துக்கொண்டிருப்பதால் முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து அமைச்சர்களும் களத்திற்கு நேரடியாகச் சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வாறு அமைச்சர்கள் தங்களது பணிகளை செய்துவருகிற சூழலில், அமைச்சர்களை நேரில் சந்தித்து பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்று மக்களுக்கு சிறப்பான திட்டங்களை அறிவித்து பொற்கால ஆட்சி நடத்திவருகிறார். தற்போது தமிழகத்தில் கரோனா குறைந்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு ஆணையை பின்பற்றுவதாக நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
நான் அமைச்சர் பொறுப்பேற்று மாவட்டத்திற்கு வருகிறபோது எனக்கு வாழ்த்துகள் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னை நேரில் சந்திக்கும் ஆர்வத்தில் அனைவரும் பெருந்திரளாக கூடுவது என்பது நோய் தொற்றினை மேலும் அதிகப்படுத்தும் சூழலை உருவாக்கும். எனவே தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலம் முடிந்த பின் நீங்கள் என்னை நேரில் சந்திக்கலாம். அனைவரின் நலன் கருதி கட்சி நிர்வாகிகள், திமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் என்னை நேரில் சந்திப்பதை தவிர்த்து, நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோரும் அவரவர் வீடுகளிலிருந்து தொற்று பரவாமல் தடுக்க உதவிடுங்கள். என்னை சந்திக்க நினைப்பவர்கள் தொலைபேசியில் அழைத்து, என்னோடு தீர்வுகாணலாம். எனவே கடந்த கரோனா முதல் அலையின்போது கழகத் தலைவர் அறிவித்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் உதவி வேண்டியவர்களை தொடர்புகொண்டு உதவி செய்ததுபோல் தமிழக முதலமைச்சர் அறிவிப்புக்கு இணங்க கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறும் உதவிக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு கழக உடன்பிறப்புகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உதவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.