கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே எடியூரப்பா தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார்.
சுமார் ஒரு ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்ற நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவானது எடியூரப்பா தலைமையிலும், அவரைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தலைமையிலும் ஆட்சி அமைத்து பாஜக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது.
மேலும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் அம்மாநிலம் உட்பட இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா, பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்து வருவதாகச் சில கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதனை நம்பாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று சொல்லி வருகின்றனர். நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி ஏதாவது உண்டு என்றால் தைரியமாக சொல்லட்டும் பார்க்கலாம். அதன் பின்னர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேசலாம்" என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் உடன் இருந்தார்.