அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் என்ற பெயரில் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அதிமுக நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன், தனது ட்விட்டர் பக்கத்தில் இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றும் மேலும், யார் யாருக்கு என்னென்ன பதவிகள் என்றும் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்;
“இ.பி.எஸ் - பொதுச்செயலாளர்
டி. ஜெயக்குமார் - துணைப் பொதுச் செயலாளர்
நத்தம் விஸ்வநாதன் - பொருளாளர்
சி.வி. சண்முகம் - தலைமை நிலையச் செயலாளர்
தமிழ்மகன் உசேன் - அவைத் தலைவர்
வேலுமணி - எதிர்க்கட்சித் தலைவர்
திண்டுக்கல் சீனிவாசன் - துணைத் தலைவர்
சில மாதங்களுக்கு மட்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை இ.பி.எஸ். தரப்பினர் அதிகளவில் பகிர்ந்துவருகின்றனர். அதேபோல், இந்தப் பதிவால் கே.பி.முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட இ.பி.எஸ். தரப்பினர் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.