திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் மறைவுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக தலைவராக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் திமுக தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 6 வது ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடியெடுத்து வைக்கிறார்.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திமுகவை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி. காரணம், உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும். நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்குமான விடியலைத் தருவோம். மதவாத இருட்டை விரட்டியடிப்போம். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம். இலட்சியப் பயணம் தொடரும். வெற்றிகள் நிச்சயம் குவியும். நம் உயிருடன் கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
ஒற்றுமையுடன் கூடிய உழைப்பு எப்போதுமே வெற்றியாக விளையும். திமுக உடன்பிறப்புகள் அந்த ஒற்றுமையைக் கட்டிக்காத்து உழைத்திட வேண்டும் என்பது திமுக தலைவர் என்ற முறையில் எனது அன்பு வேண்டுகோளாகும். உங்கள் கோரிக்கைகளைக் கவனிக்க நான் இருக்கிறேன். என் வேண்டுகோளை நிறைவேற்ற நீங்கள் இருக்கிறீர்கள். நம் உயிருக்கு உயிராகத் திமுக எனும் பேரியக்கம் இருக்கிறது. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட தி.மு.க எனும் பேரியக்கம், நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான விடியலைத் தர வேண்டிய பொறுப்பில் பங்கேற்றிருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, உங்களில் ஒருவனான நான் ஆயத்தமாக இருக்கிறேன். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவராக பொறுப்பேற்று ஆறாம் ஆண்டு தொடங்கியதையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (28.08.2023) பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எ.வ. வேலு, சேகர்பாபு, சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என பலரும் உடன் இருந்தனர்.