ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக முதல்வர் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது வருத்தத்தை தருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவத்தில் மாநில அரசு கண்டித்த விதம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஏதோ ஒப்புக்கு சப்பாணியாக சாதாரண கை சண்டையை போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியில் இருக்கக்கூடிய ராணுவ வீரர் ஓய்வுக்காக வந்திருந்த பொழுது ஆறு, ஏழு நபர்கள் வீட்டிற்குள் சென்று அடித்து உதைத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்திருக்கிறார்.
அதற்கு இதுவரை நமது முதல்வர் ஒரு கண்டனக் குரல் கொடுக்கவில்லை. அதற்காகத்தான் இந்த நிகழ்வு முடிந்த பிறகு மிகப்பெரிய அளவில் தமிழகத்திலிருந்து வந்திருக்கக்கூடிய முன்னாள் ராணுவப் பிரிவினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் செல்ல இருக்கிறார்கள். அதன் பிறகு என்னோடு முன்னாள் ராணுவ வீரர்கள் 7 பேர் கவர்னரை சந்திக்க இருக்கின்றோம். இவர்களுடைய மனக்குமுறலை ஆளுநரிடம் கொட்டித் தீர்க்க இருக்கிறார்கள். பாஜக சார்பில் நாமும் தமிழக அரசு எப்படி கடமை செய்யாமல் இருக்கிறது; காவல்துறை எப்படி கடமையை செய்யாமல் இருந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி ஒரு புகார் மனு அளிக்க உள்ளோம்'' என்றார்.