டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14.01.2020 காலை 11.00 மணி தொடங்கியது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் (இன்று) ஜனவரி 21- ஆம் தேதி ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்ப பெற ஜனவரி 24 ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு பிப்ரவரி 8- ஆம் தேதி நடைபெறும். சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 11- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெர்ஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்ற 10 வாக்குறுதிகளை அளித்தனர்.
தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சி தேர்தல்அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதில் மகிழ்ச்சி!
— Dr S RAMADOSS (@drramadoss) January 20, 2020
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை ஏற்கனவே பாமக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதில் மகிழ்ச்சி!" என்று கூறியுள்ளார்.