அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், அன்பழகன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் தொகுதி பொறுப்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி என்பதாலும், திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியும், அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அமைச்சர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் கனிசமாக இருக்கும் வேட்டுவ கவுண்டர் சமுதாய மக்கள் மற்றும் இஸ்லாமியர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். மேலும், செந்தில் பாலாஜியின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கட்சியினரிடம் கூறி வருகிறார்.
தொகுதியில் இரு கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் செந்தில் பாலாஜி செயல்வீரர்கள் கூட்டம் நடத்திய அதே மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டமும் நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவுக்கு சோதனை வந்தபோது காட்டிக்கொடுத்தவர் செந்தில்பாலாஜி. அவருக்கு இந்த தேர்தல் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் என்று காட்டமாக பேசினார்.
கடந்த முறை பணத்தை தண்ணீராக இறைத்ததால்தான் தேர்தல் ரத்தானது. அதேபோல் இந்த முறையும் செய்வார். அப்போது கையும் களவுமாக பிடித்துக் கொடுத்து தேர்தலை நிறுத்த வேண்டும் என்று பொறுப்பாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் திட்டம் தீட்டுகின்றனர்.
ஆனால் தொகுதியில் இறங்கியிருக்கும் அமைச்சர்கள் படையை பற்றி கவலைப்படாமல், ஜோதிமணி, கே.சி.பி., நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோருடன் களத்தில் கலக்கி வருகிறார் செந்தில் பாலாஜி.