Skip to main content

'அபாண்டப் பொய்...' வழக்கு நடப்பதே ஷங்கருக்கு தெரியாதா?-கேள்விகளை அடுக்கும் ஆரூர் தமிழ்நாடன்

Published on 21/02/2025 | Edited on 21/02/2025

 

'Absolute lie; doesn't Shankar know that a case is pending?' - Arur Tamil Nadu questions

இயக்குநர் ஷங்கர் தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்ததாக, அவர் மீது நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், இந்த எந்திரன் கதைத் திருட்டைக் காரணம் காட்டி, இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை அதிரடியாக முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.

நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன், கவிஞர், கதை ஆசிரியர், பாடலாசிரியர், எழுத்தாளர், மேடைப்பேச்சாளர் என பன்முகங்களைக் கொண்டவர் .ஏராளமான இலக்கியப் படைப்புகளை எழுதியிருக்கும் இவர், 1996-ல் நக்கீரன் குழும இதழான `இனிய உதயம்' இதழில், ரோபோவை மையமாக வைத்து `ஜூகிபா' என்ற கதையை எழுதினார். இதே கதை 2007-ல் வெளியான அவரது ’திக்திக் தீபிகா’என்ற கதைத் தொகுப்பிலும் பிரசுரமானது. இந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு அக்டோபரில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில், பிரமாண்டமாக படமாக ‘எந்திரன்’ வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த தமிழ்நாடன், தனது கதையான ஜூகிபாவைத் திருடி, எந்திரன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதை அறிந்து திடுக்கிட்டார். இதனால் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாகப் புகார் கொடுத்தார். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பாளர் கலாநிதிமாறனுக்கும் ஆரூர் தமிழ்நாடன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அவர்கள் தரப்பில் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை

இதையடுத்து இயக்குநர் ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மீதும் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கும் ஒன்றும் ஆரூர் தமிழ்நாடன் சார்பில் தொடரப்பட்டது.

கிரிமினல் வழக்கில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இருவருக்கும்  எழும்பூர் 13வது நீதிமன்றம் 2011-ல் சம்மன் அனுப்பியது.  அந்த சம்மனை அடுத்து இயக்குநர் ஷங்கரும் கலாநிதி மாறனும், ‘நாங்கள் கதையைத் திருடவில்லை..’ என்று கூறியதோடு,  அந்த கிரிமினல் வழக்கு செல்லாது என்று உத்தரவிடும்படி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.

எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இருந்தது. இந்நிலையில் இந்த எந்திரன் தொடர்பான சிவில் வழக்கு 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 6.6.2019 அன்று நீதிபதி புகழேந்தி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், “கலாநிதி மாறன் தயாரிப்பாளர்தான்.. அதனால் அவருக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்பதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன். அதேசமயம்,  இயக்குநர் ஷங்கருக்கு கதைத் திருட்டில் முகாந்திரம் இருப்பதால், அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என உத்தரவிட்டார். மேலும், ஆரூர் தமிழ்நாடனின் 'ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' சினிமாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது என்பதால், ஷங்கருக்கு எதிரான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம்” என்று அழுத்தமாகவே தெரிவித்திருந்தார். கூடுதலாக, `ஜூகிபா' கதைக்கும் `எந்திரன்' படத்துக்குமான 16 ஒற்றுமைகளை நீதிபதி புகழேந்தி பட்டியலிட்டுக் காட்டினார்.

இப்படி, தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் எந்திரன் திரைப்பட கதை காப்புரிமை தொடர்பான வழக்கில், தற்போது இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

இதுகுறித்து வழக்கறிஞர் வைரவேலிடம் நாம் பேசியபோது, "இந்த கதைத் திருட்டு வழக்கு கடந்த 2011ல் பதிவு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மேல் மோசடி நடந்ததாக பதிவு செய்யப்பட்ட எஃப் ஐ(FIR)களை அமலாக்கத்துறை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது FIR பதிவு செய்வது வழக்கம். அதன் நீட்சியாக, ஆரூர் தமிழ்நாடனுக்கு கடந்த 2021ல் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும், அமலாக்கத்துறை அவரிடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டது. பின்னர், இதுதொடர்பான எவ்வித நடவடிக்கையும் வெளியே தெரியவில்லை. இதன் பின்னணியில், ஷங்கருக்கு இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கருதி எந்திரன் படத்திற்காக.. ஷங்கர் பெற்ற பணத்துக்கு சமமான சொத்துகளை தற்போது ED முடக்கியுள்ளது. இதை Predicate Offence எனக் கூறுவார்கள். அதாவது, ஒரு தவறான செயலால் ஒரு புகார் பதிவாகும் பட்சத்தில், அந்த தவறான செயலால் ஈட்டிய பணத்தையோ அல்லது அந்த பணத்திற்கு ஈடான சொத்தையோ அமலாக்கத்துறை முடக்கலாம். அதைத்தான் தற்போது அமலாக்கத்துறை செய்துள்ளது. இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் குற்றவாளி என்பது உறுதியானால் அவருக்கு முடக்கப்பட்ட சொத்துகளுடன் ஏழு வருட ஜெயில் தண்டனையும் உறுதியாக கொடுக்கப்படும்" என்றார்.

'Absolute lie; doesn't Shankar know that a case is pending?' - Arur Tamil Nadu questions

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இயக்குநர் ஷங்கர் இன்று (21/02/2025) விளக்கம் அளித்துள்ளார். அதில், 'எந்திரன் படம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி விட்டது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளேன். எந்திரன் கதையின் உரிமையாளராக அறிவிக்கக்கோரிய ஆரூர் தமிழ்நாடனின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. இருதரப்பு ஆதாரங்கள், வாதங்களை ஆராய்ந்து ஆரூர் தமிழ்நாடன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற தீர்ப்பை நம்பாமல் வெறும் புகார் அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்கத் துறையின் தொடர் நடவடிக்கையால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். தங்கள் நடவடிக்கை திரும்பப்  பெறாவிட்டால் மேல்முறையீடு செய்யப்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.

'Absolute lie; doesn't Shankar know that a case is pending?' - Arur Tamil Nadu questions

                                                எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் 

இந்நிலையில் ஷங்கரின் விளக்கம் குறித்து புகார் தாரரான ஆரூர் தமிழ்நாடன் நம்மிடம் விளக்கம் அளிக்கையில், ''வழக்கு தள்ளுபடி ஆகவில்லை. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கக் கூடிய வழக்கை வைத்து தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு ஷங்கர் சென்றார். ஆனால் தொடர்ந்து நாம் அந்த வழக்கில் கண்டெஸ்ட் செய்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தள்ளுபடி ஆகவில்லை. ஷங்கர் சொல்வது அபாண்டமான பொய். அப்போது வழக்கு நடப்பதே  ஷங்கருக்கு தெரியவில்லையா? என்ற கேள்வி எழுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்