கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அசோக் நகர் பகுதியில் திறந்த வெளி உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கோவையில் சாலை வசதிகள் மிக மோசமாக இருக்கிறது. அரசு அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு பணி செய்ய வேண்டும் என்பதற்காக வரக்கூடிய ஒரு வாரத்திற்குள் பாஜக சார்பில் கோவை மாவட்ட தலைவர் தனியாக ஒரு போராட்டத்தை நடத்த இருக்கிறார்.
அரசியல் ரீதியாக முதல்வர் தன் மகனை அமைச்சராக ஆக்கியுள்ளார். அரசியலில் வர யாருக்கும் உரிமை உண்டு. அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். திமுக ஒரு காலத்தில் சாதாரண மக்களுக்கான கட்சியாக இருந்து. இன்று அது ஒரு குடும்பத்திற்கான கட்சியாக மாறியுள்ளது.
இதற்கு மாறாக பாஜகவில் எங்கள் தலைமைப் பொறுப்பு என்பதே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான். அனைவருமே குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தலைவராக இருக்க முடியாது. ஜனநாயக ரீதியாக அடுத்தவர்களுக்கு வாய்ப்பு தரப்படும்.
அண்ணாமலை வாட்ச் கட்டியுள்ளார். அதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நான் பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என வேண்டுமானால் சொல்லுவேன். அவர் சட்டை, அவரது பேண்ட், அவரது ஷீ எப்படி இருக்கிறது என்பதெல்லாமா ஒரு கேள்வி. தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகள் ஆயிரம் உள்ளது. அதை விட்டுவிட்டு வாட்சை பார்த்தியா? ஹேர்ஸ்டைல் பாத்தியா? எந்த சலூனுக்கு போறார். இதுக்கெல்லாம் நாம் நேரம் செலுத்த வேண்டுமா?” எனக் கூறினார்.