Skip to main content

அலட்சியப்படுத்திய இ.பி.எஸ்., ஒ.பி.எஸ்..! அதிமுகவை உதறிய விஜிலா சத்யானந்த்!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Vijila Satyanand join DMK ..

 

கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் விஜிலா சத்யானந்திற்கு நெல்லை மாநகராட்சியின் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரை மேயர் ஆக்கினார். அதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு மாநகராட்சி மேயர்களுக்கு ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த ஜெயலலிதா, விஜிலா சத்யானந்தையும் போட்டியிட வைத்து ராஜ்ய சபா எம்.பி. ஆக்கினார்.


மேலும் ஜெயலலிதா, தன்னுடைய காலத்தில் விஜிலா சத்யானந்திற்கு பல சலுகைகளை வழங்கினார். ஜெயலலிதா மறைந்த பின்னர் அ.ம.மு.க.விற்கு சென்று திரும்பிய விஜிலாவிற்கு அ.தி.மு.க.வின் தலைமை, மாநில மகளிர் அணி செயலாளர் பதவியை வழங்கியது. அதுமட்டுமல்ல, கட்சியில் தீவிரமாக பணியாற்றிய விஜிலா சத்யானந்திற்கு அ.தி.மு.க.வின் தலைமை கழகத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு மகளிர் அணி செயலாளர் பணியை மேற்கொள்ள வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. 


இந்நிலையில் விஜிலாவின் எம்.பி. பதவி காலம் முடிந்த பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் பாளையங்கோட்டையில் போட்டியிடுவதற்கு தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால், தலைமையோ இவர் மீதான அதிருப்தியில் வேட்பாளர் வாய்ப்பை ஜெரால்டுக்கு வழங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட மன அதிருப்தியின் காரணமாக விஜிலா சத்யானந்த் ஒதுங்கியே இருந்தார். அதே சமயம் இவரைக் கண்டுகொள்ளாத அ.தி.மு.க.வின் தலைமை, தலைமைக் கழகத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த தனி அறையை காலி செய்தது. இதனால் அவர் தலைமை கழகம் சென்று வரமுடியாத நிலைமை. மேலும் கட்சித் தலைமையால் தான் அலட்சியப்படுத்தப்படுவது அவரை வாட்டியிருக்கிறது.


விஜிலா சத்யானந்த் எம்.பி. பதவி வகித்த போது அதுசமயம் தி.மு.க. எம்.பி.யாக இருந்த ஆர்.எஸ்.பாரதியுடன் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அதனடிப்படியில் அதிமுக தலைமை மீது வெறுப்பிலிருந்த விஜிலா சத்யானந்த், பாரதியின் மூலமாக தி.மு.க.வில் இணைந்திருக்கிறார் என்கிறார்கள் நெல்லை அரசியல் புள்ளிகள்.

 

 

சார்ந்த செய்திகள்