தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, "இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுக தான் பெரிய கட்சி எனவே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாகப் பேசியுள்ளோம். அதேபோல் ஓபிஎஸ் அவர்கள் என்னை சந்தித்தபோதும் நான் அவரிடம் கூறியது 'எதிர்த்து போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக மூன்று அமைச்சர்கள் பண பலம் உள்ளிட்டவற்றை சமாளிக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் திருச்செந்தூர் கோவிலை பொறுத்தவரை உண்டியலில் சேரும் பணத்தை மட்டுமே எடுத்து அனாவசிய செலவுகள் செய்கின்றனர். குறிப்பாக அதிகாரிகளின் மிக்சர், லட்டு, காராபூந்தி போன்ற பலகாரங்களுக்கு செலவிடுகின்றனர். தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்ற கட்சிகளை குறித்து அவர் எவ்வளவு தரக் குறைவாகப் பேசினார் என்பது தமிழக மக்கள் அறிவார்கள். குறிப்பிட்டுச் சொன்னால் அந்த மாவட்டத்தின் செயலாளர் கூட அவருக்கு துணை நிற்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தும் வேட்பாளர் ஒரு பொதுவானவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்" என்றார்.