மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை விசிட்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணி மற்றும் மக்களவைத் தேர்தலில் தொகுதி எண்ணிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் இன்னும் கொஞ்சம் மைலேஜ் ஏற்றும் விதத்தில் அண்ணாமலை தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் எனச் சொன்னது இன்னும் அதிமுக - பாஜக கூட்டணியில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறது.
பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு மதிய உணவு முடித்துக்கொண்டு, மூத்த நிர்வாகிகளுடன் சில நிமிடங்கள் உரையாடினார். அப்போது அவர், “தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை பார்த்து உற்சாகம் அடைகின்றனர். திமுகவின் குடும்ப ஆட்சியை அகற்ற பாஜக தான் மாற்று என்பதை உணர்கின்றனர். தேர்தல் அரசியலுக்கு பூத் கமிட்டி அவசியம். அந்த கமிட்டி இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். பூத் கமிட்டி அளவில் அடிக்கடி கூட்டங்களை நடத்தி, அதில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். மாநிலத் தலைவராக அண்ணாமலையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது” என்று பேசினார்.
அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “இதற்கு முன்பு இருந்த பாஜக தலைவர்கள் தோழமை உணர்வோடு, கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தனர். அண்ணாமலை, மாநிலத் தலைவருக்கு உரிய தகுதி இல்லாதவர். அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் கண்டிக்க வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணி தொடரக்கூடாது. பிரதமராக மோடி வரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அண்ணாமலை செயல்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.