
அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா? எனத் தமிழ்நாடு பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது ஐ.டி விங் செயலாளர் திலீப் கண்ணனும் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். நிர்மல் குமார் விலகிய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதேபோல் தனது முகநூல் பக்கத்திலும் திலீப் கண்ணன் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார். தமிழ்நாடு பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகியது பாஜக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாஜக நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சாடுவது போல் ட்விட்டரில் பதிவுகளைப் பதிவிட்டுள்ளார். அதில், “கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை. நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?
கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய அதிமுகவினருக்கு கொங்கு மண்டல வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது மீண்டு எழுவதற்கான அறிகுறி இல்லை. கோட்டையை பிடிப்பதற்கான கனவை மறந்து விடுங்கள்” எனக் கூறியுள்ளார். மேலும், அண்ணாமலை தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.