Skip to main content

இலங்கையில் உருவாகிறது பா.ஜ.க.! திரைமறைவு ரகசியங்கள்!   

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

sri lanka country bjp leader gayathri raghuram

 

இலங்கையிலும் பாஜக கட்சியை துவக்குவதற்கான முயற்சிகள் ரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினரும் காந்தளம் பதிப்பகத்தின் உரிமையாளருமான மறவன் புலவு சச்சிதானந்தம் தான், ’’இலங்கையில் உள்ள இந்துக்களை ஒருங்கிணைக்கும் முகமாக இந்த முயற்சியை எடுத்து வருகிறார்’’ என்கின்றன தகவல்கள்.

 

இதுகுறித்து அவரை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவருக்கு நெருக்கமான தமிழ்த்தேசியத் தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘’இலங்கை அரசின் கண்காணிப்பில் அவர் இருப்பதால் அவரது எண் எப்போதும் அனைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். ஆனால், அவர் தனது அரசியல் செயல்பாடுகளை தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இந்தியாவில் உள்ள பாஜக கட்சியை இலங்கையிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான தேவை இருப்பதாகவும் சொல்லிவருகிறார் சச்சிதானந்தம். 

 

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் அரசியல் கட்சிகள் உருவாகியிருக்கின்றன.

 

sri lanka country bjp leader gayathri raghuram

 

அந்த வகையில், சைவ சித்தாந்தங்களில் புலமைப் பெற்றவரான சச்சிதானந்தம், இலங்கையில் சிங்கள அரசாங்கத்தால் அழிக்கப்பட்டு வரும் சைவ திருக்கோயில்களை பாதுகாக்காக்கவும் அதனை மீட்டெடுக்கவுமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்துக்குப் பல தகவல்களைக் கொண்டு சேர்த்துள்ளார்‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

அதே போல, தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம் மூலம் பாஜக தலைவர்கள் சிலருடனும் விவாதித்துள்ளார் சச்சிதானந்தம். குறிப்பாக, இலங்கையில் பாஜக கட்சியைத் துவக்குவது குறித்து விவாதித்துள்ளனர். பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார் காயத்ரி ரகுராம்.

 

இலங்கையில் பாஜகவை உருவாக்கும் சச்சிதானந்தத்தின் முயற்சிக்குப் பின்புலமாக இருந்து உதவிவரும் காயத்ரி ரகுராமிடம் நாம் பேசியபோது, ‘’இந்துக்களின் அடையாளத்தையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் அழிக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அவைகள் தடுக்கப்பட வேண்டும். இந்துக்களின் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாக்கவும், அதனை மீட்டெடுக்கவுமான அரசியல் கட்சிகள் அங்கு வலிமையாக இல்லை. இப்போதும் இரண்டாம்தர மக்களாகத்தான் தமிழர்கள் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பது அரிதாகியிருக்கிறது. அதனால், இந்தியாவில் இருக்கும் பாஜக போன்று, ’இலங்கை பாஜக’ என்ற ஒரு அரசியல் கட்சி இலங்கையில் தேவைப்படுகிறது. அதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் பாஜக உருவாவதற்கு நாங்கள் துணை நிற்போம் ‘’ என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்