மத்திய உளவுத்துறையினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளனர். அதன்படி உளவுத்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அதில், அண்ணாமலையின் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்ணாமலைக்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இந்தப் பாதுகாப்புப் பிரிவுகள் வருவதால் அண்ணாமலையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் திருநெல்வேலியில் உள்ள அண்ணாமலையிடம் ஒப்புதலை வாங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “சிவனே என்று ஏதோ ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அரசியலில் அமர்ந்துள்ளேன். Z பிரிவு பாதுகாப்பினை மத்திய அரசு முடிவு செய்து சொன்னார்கள். இந்தப் பாதுகாப்பு என்பது எனக்கு ஏதோ ஒரு இடத்தில் நெருடலாக உள்ளது.
திடீர் திடீரென நாம் நிகழ்வுகளை மாற்றுகிறோம். ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு திடீரெனச் செல்கிறோம். பாதுகாப்புகள் என்று வரும் பொழுது நிறைய வழிமுறைகள் அதனுடன் வருகிறது. மத்திய அரசு கொடுத்துள்ள இந்தப் பாதுகாப்பு இந்தியாவில் சில பேருக்கு மட்டுமே கொடுக்கப்படும். எங்கு சென்றாலும் 48 மணி நேரங்களுக்கு முன்னாடி பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொல்ல வேண்டும். அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்த பின்பே நாம் அந்த இடத்திற்குச் செல்ல முடியும். ஆனால் வேறு வழியில்லை. அரசியலில் இருக்க வேண்டும். ஆக்ரோஷமாகப் பேசுகிறோம் அதனால் சில எதிரிகளை சம்பாதிக்கிறோம்.
மத்திய அரசின் உளவுத்துறையினர் ஆய்வு செய்து இதை சொல்லியுள்ளனர். நானும் காவல்துறையில் வேலை செய்தவன் என்பதால் இதை கவனக்குறைவாக எடுக்காமல் அதை தீவிரமாக எடுத்துக் கொள்வதும் என் கடமை. முடிந்தவரை இவர்கள் எனக்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்காமல் தொண்டர்களிடமும் மக்களிடமும் பழகுறதுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.