தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததே நாங்குநேரி சம்பவத்திற்கு முக்கிய காரணம். தென் தமிழகத்தில் சிறப்பு பொருளாதாரத்தை மண்டலத்தை உருவாக்கி பெரிய தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார்.அதை தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் 4 நாள் நடைபயணமாக நேற்று முன் தினம் பாளையங்கோட்டையில் தொடங்கினார். அப்போது, விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அண்ணாமலை, “அரசியலில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். நீட் தேர்வில் 18 தற்கொலைகள் நடந்துள்ளது என்றால் தற்கொலைக்கு தூண்டியதாக திமுகவினர் மீது தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதற்காகவே இந்திய தண்டனை சட்டத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் என தனிப்பிரிவே உள்ளது. நீட் தேர்வில் பழங்குடியின மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் வெற்றி பெறுகின்றனர். சாமானிய குடும்பத்தினரை சேர்ந்த மாணவர்களும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர்களாக ஆகின்றனர். இந்த முறை, இந்திய அளவில் முதல் நான்கு இடங்களை தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிமாக உருவாக்கப்பட வேண்டும். நாங்குநேரி சம்பவத்திற்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாததே காரணம். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து முடித்துவிட்டு தென் தமிழகத்தில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளித்து பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் சாதி, கந்துவட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு முடிவு வரும்” என்று தெரிவித்தார். நாங்குநேரி சம்பவத்தில் ஈடுப்பட்ட 6 மாணவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு சிறையில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.