கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மத்திய மந்திரி பொன்னுசாமி பா.ம.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி சனிக்கிழமை டெல்லியில் உள்ள பாஜக தலைமையில் அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னியிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர், பிரதமர் மோடி கூறியதால்தான் பிரிந்த அணியுடன் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது பற்றி மத்திய மந்திரியிடம் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘ஆட்சியில் இருக்கிறவர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது. பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் ஏன் சுட்டிக்காட்டுகிறார் என்று தெரியவில்லை’ என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் இணைய திட்டம் ஏதும் உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘யார் யார் எங்கு வந்து சேரப்போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.