அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.யும் எம்.ஜி.ஆர்.காலத்து அரசியல்வாதியுமான கே.சி.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவகாரம் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட சூலூர் போலீசார் கைது செய்திருக்கின்றனர். 11 செக்சன்கள் அவர் மீது பாய்ந்துள்ளன.
திடீரென அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, "சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோதும், பிறகு மீண்டும் கட்சியில் இணைந்த போதும் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளராகவே இருந்தார் கே.சி.பி.! அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியை ஒழித்துவிட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என சட்டவிதிகளில் திருத்தம் செய்ததையும் எதிர்த்து ஆணையத்தில் முறையிட்டிருக்கிறார். இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக 2018-ல் உருவான பிரச்சனையின் போது, "பா.ஜ.க.வுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும்' என கே.சி.பி. பேசியதை அடுத்து கட்சியிலிருந்து அவரை நீக்கினார் எடப்பாடி.
இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் ஆணையத்தில் அவர் போட்ட வழக்கு அப்படியே நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி, விரைந்து முடிவை அறிவிக்க வலியுறுத்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார் கே.சி.பி.!. இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்திலும், டெல்லி உயர்நீதி மன்றத்திலுமுள்ள கே.சி.பி.யின் வழக்கால் சசிகலா, எடப்பாடி, ஓ.பி.எஸ். மூவருக்கும் சிக்கல் என்பதை எடப்பாடிக்கு வழக்கறிஞர்கள் தரப்பிலிருந்து ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு கே.சி.பி.யை வரவழைத்து வழக்கை வாபஸ் வாங்க எடப்பாடி வலியுறுத்த அதனை மறுத்துவிட்டார் கே.சி.பி.! இப்படிப்பட்ட சூழலில், டெல்லி உயர்நீதிமன்றத்திலுள்ள வழக்கிலும் தேர்தல் ஆணைய வழக்கிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார் கே.சி.பி.! டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 6-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அதனையொட்டி, வழக்கை வாபஸ் வாங்க வேண்டுமென அழுத்தமும் மிரட்டலும் கே.சி.பி.யைத் துரத்தியது. அவர் மறுக்கவே, கைது வில்லங்கம் அவர் மீது பாய்ந்துள்ளது'' என சொல்கிறார்கள் கே.சி.பி.க்கு ஆதரவான அ.தி.மு.க.வினர்.