தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்றோரது படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்டார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவை சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்துமதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
தொடர்ந்து பேசிய அவர், “பார்ட் 1 வீடியோவை வைத்து முதலமைச்சர் மற்றும் திமுக அமைச்சர்கள் குறித்து 4 கேள்விகளை வைத்துள்ளேன். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆரம்பித்த போது சொல்லிக்கொள்ளும் படியான எவ்வித தொழிலும் செய்யவில்லை. 2008 இல் இருந்து 2011 வரை 300 கோடிக்கு படம் எடுத்துள்ளார். அதில் அதிகமான படங்கள் தோல்வி அடைந்துள்ளன. அப்படி இருக்கையில் அந்த பணம் எங்கிருந்து வந்தது. தயாரிப்பு நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் யார்? இன்று நமது கணக்கெடுப்பின் படி ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு 2010 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சபரீசன் இங்கிலாந்தில் இருக்கும் மணிலாண்டரி பேங்க் இருக்கும் பில்டிங்கில் இரண்டு கம்பெனி நடத்துகிறார். மணிலாண்டரி பேங்கின் ஒரு இயக்குநர் சபரீசனின் பார்ட்னர். இதற்கு சபரீசன் பதில் அளிக்க வேண்டும்.
முதலமைச்சர் துபாய் போயிருந்த போது அதிகமான கையெழுத்துகளைப் போட்டார். அவர் போட்ட கையெழுத்துகளில் ஒன்று நோபல் ஸ்டீல் என்ற கம்பெனி இந்தியாவில் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது என்பதற்காக. நோபல் பிரைவேட் கம்பெனியின் சேர்மேன் பஷீர் முகமது. இந்த கம்பெனியின் இயக்குநராக உதயநிதி ஸ்டாலின் 2009 இல் இருக்கிறார். பின் ராஜினாமா செய்கிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016 ஆம் ஆண்டு இருக்கிறார். அவரும் ராஜினாமா செய்கிறார். அதே கம்பெனியில் முதல்வரும் ஒப்பந்தம் செய்கிறார்.
2006 இல் இருந்து 2011 வரை திமுக ஆட்சியில் இருக்கும் போது சென்னையில் பேஸ் 1 மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்கான அனுமதி வருகிறது. இத்திட்டத்திற்கு மூன்று தரப்பினர் பணம் கொடுக்கிறார்கள். ஜிகா 59% நிதியுதவியும், மத்திய அரசு 15% நிதியுதவியும், தமிழக அரசு 21% நிதியுதவியும் செய்தன. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 16 ஆயிரத்து 600 கோடி ரூபாய். தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கையில் அவசர அவசரமாக இத்திட்டத்திற்கு டெண்டர் விடுகிறார்கள். இதில் எங்களது நேரடிக் குற்றச்சாட்டு டெண்டர் எடுத்த ஆல்ஸ்டோர்ம் என்ற அமெரிக்க நிறுவனத்தால் முதலமைச்சருக்கு 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இது இண்டோ ஈரோப்பியன் வெண்ட்சர் பிரவேட் லிமிட்டெட் என்ற சிங்கப்பூர் கம்பெனி மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி கம்பெனி என்கிற இரு கம்பெனிகள் மூலம் 2011 தேர்தல் செலவுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. இது குறித்து சிபிஐக்கு புகாரளிக்க உள்ளேன்” எனக் கூறினார்.