தமிழகம் முழுவதும் ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ராமேஸ்வரத்தில் ஊழலுக்கு எதிரான நடைபயணத்தைத் தொடங்கவுள்ளார். இன்று மாலை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, ‘என் மண்; என் மக்கள்’ நடைபயணத்தைத் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இந்தப் பாதயாத்திரை நடக்க இருக்கிறது. தமிழகத்தில் 5 பகுதியாக நடக்கும் இந்த யாத்திரையின் மூலம் 234 தொகுதிகளுக்கும் செல்கிறோம். மூத்த தலைவர்கள் இதனை வழிநடத்துவார்கள், ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை நடக்கும் முதல் பகுதி யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். கட்சியின் மாநிலத் தலைவராக நான் எல்லா இடங்களிலும் கலந்துகொள்கிறேன்.
இதில் பங்கேற்கக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருக்கிறோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் ஓரிரு நாளில் கலந்துகொள்வார். யாத்திரையின் தொடக்க விழாவில் மோடி என்ன செய்தார் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்படுகிறது. ராமேஸ்வரத்தில் ஒரு லட்சம் புத்தகம் விநியோகம் செய்யப்படவிருக்கிறது. ராமேஸ்வரத்தில் மீனவர்களின் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு செய்தது என்னென்ன? என்பதைப் பற்றிப் பேசவிருக்கிறோம்.
எழுதிக் கொடுத்ததைத்தான் முதல்வர் ஆக்ரோஷமாக வாசித்தார். அமைச்சர் பொன்முடியின் ரூ.41 கோடி வைப்பு நிதி குறித்து அவர் ஏன் பேசுவதில்லை? வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறார். திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டதற்காக எங்கள் மீது திமுக கோபத்தைக் காட்ட நினைத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்” என்றார்.