தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள பஞ்சப்பள்ளியில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். தொடர்ந்து அப்பகுதியிலேயே இலங்கை அகதிகளுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 50 குடியிருப்புகளின் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பஞ்சப்பள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தலைவராவதற்குத் தகுதி இல்லாதவர்களை எல்லாம் தலைவராகப் போட்டுள்ளார்கள். இயக்கத்தின் தலைவராகப் பேசுபவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். நாலாந்தர பேச்சாளராகப் பேசுவது தலைவருக்கு அழகல்ல. மைக் கிடைக்கிறதே என்று பேசுபவர் அண்ணாமலை. அவர் ஒரு அரசியல்வாதியே இல்லை. சீசன் அரசியல்வாதி. கர்நாடகாவில் காவல்துறையில் பணியாற்றியபோது, தமிழகத்திற்கு காவிரி நீர் விடக்கூடாது எனப் பேசியவர். அண்ணாமலை தலைவருக்கே தகுதியில்லாதவர். தகுதியில்லாதவர்களைத் தலைவராகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பாஜகவிற்கு கொள்கை கிடையாது, பேசிப் பேசித்தான் கட்சியை வளர்க்கின்றனர். அண்ணாமலை எல்லா தொழிலதிபர்களையும் மிரட்டி வருகிறார். அண்ணாமலையின் பாணி மிரட்டல் பாணி. யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரியும். மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளையும், மற்றவர்களையும் மிரட்டி வருகிறார்கள். தமிழகத்தில் அது எடுபடாது” என்றார்.