திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் சக்கரபாணி, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “கடந்த 10 ஆண்டுகளாக நடந்த இருண்ட அதிமுக ஆட்சியில் செய்யாதவைகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற 9 மாதங்களில் செய்துள்ளது. தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர் கரோனா நிதி ரூ.4 ஆயிரம், 14 வகையான மளிகைப் பொருட்கள், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை முதல் கையெழுத்தாக நிறைவேற்றினார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதி 505-ல் தற்போது வரை 202 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொங்கல் தொகுப்பு மஞ்சள் பை மற்றும் கரும்பு வாங்கியதில், ரூ.163 கோடி ஊழல் என்று வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். தற்பொழுது தமிழக அரசால் கொடுக்கப்பட்ட பொங்கல் மஞ்சள் பை ரூ.33-க்கு வாங்கியது கூட தெரியாமல், ரூ.60-க்கு வாங்கியதாக எடப்பாடியும், அண்ணாமலையும் அபாண்டமாக பொய் பேசி வருகிறார்கள். கரும்பு ஒன்றுக்கான அரசு நிர்ணயம் செய்த கொள்முதல் விலை ரூ.33 ஆகும். கரும்புக்கும், பைக்கும் சேர்த்து மொத்த கொள்முதல் விலையே ரூ.140 கோடியாகும். உண்மைநிலை இவ்வாறு இருக்க, பொங்கல் பை மற்றும் கரும்பு கொள்முதலில் மட்டும் ரூ.163 கோடி ஊழல் நடந்துள்ளது என்று ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்ற அண்ணாமலை கூறுகிறார் என்றால், கணக்கில் தெரியாமலேயே பொய் சொல்வதில் திறமையாக இருப்பவர் தான் இன்றைய பா.ஜ.க தலைவர். அதிமுக-வின் வளர்ப்பு பிள்ளையான அண்ணாமலை ஐ.பி.எஸ் துளியும் தகுதியில்லாத பொய்யை மட்டுமே வாய்கூசாமல் பேசி வருகிறார்” என்று கூறினார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி உள்ளிட்ட ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.