'ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது' என புதியதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடகாவின் முதல்வர் பசவராஜ் பொம்மையின் 'மேகதாதுவில் அணைக் கட்டுவோம்' என்ற கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ கூட்டத்தில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மேகதாது அணை குறித்த கேள்வி பசவராஜ் பொம்மையிடம் எடுத்துவைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "மேகதாது விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. சட்டப்பூர்வமாக நாங்கள் சரியான பக்கத்தில் இருக்கிறோம். காவிரி படுகையில் உள்ள உபரி நீரைப் பயன்படுத்துவது எங்களின் உரிமை" என கூறினார்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை கர்நாடக முதல்வரின் மேகதாது அணைக்கட்டும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜக அண்ணாமலை கூறியுள்ளதாவது, ''மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது. மேகதாது அணையை கட்டவிடமாட்டோம். மீன்வர்களுக்கான வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' என தெரிவித்துள்ளார்.