புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும், நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சிகள் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட ஏஐயூடிசி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
குமுளி, தமிழக- கேரள எல்லையில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேனி, நேரு சிலை அருகே பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு தொழிற் சங்கங்கள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 99 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் 9 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை நகரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வே. துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வீ. நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதேபோல கந்தர்கோட்டை, கறம்பக்குடி, அன்னவாசல், விராலிமலை, திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட 9 மையங்களில் மறியல் நடைபெற்றது. ஆவுடையார்கோயிலில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை நகரில் வங்கி ஊழியர் சங்கத்தினரும், அரசுப் பணியாளர் சங்கத்தினரும் தனித்தனியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். நெல்லை மாநகரில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 61 பெண்கள் உள்பட 297 பேர் கைது செய்யப்பட்டனர். அனைத்து தொழில் சங்கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம், வேப்பமூடு சந்திப்பு ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.ப் ஹெலன் டேவிட்சன் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மா. கமயூ மாவட்ட செயலாளர் செல்லசாமி உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கேரள மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. கோவை, வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இன்று மறியல் போராட்டமும் நடைபெற்றது.
திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை. நீலகிரி மாவட்டத்திலும் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.
வேலைநிறுத்த போராட்டத்தால் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இந்த வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், முழுமையாக பங்கேற்றதால் நாடு முழுவதும் வங்கி சேவை கடுமையாக பாதித்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவை நடைபெறவில்லை.
ஈரோட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான சின்னசாமி தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர்கள் அரசு பணியாளர்கள் ஆட்டோ தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தொகுதி எம்பி திருப்பூர் சுப்பராயன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. பிறகு போலீசார் எம்பி சுப்பராயன் உட்பட 4500 பேரை கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் மறியல் நடத்தினார்கள் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரத்தில் அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் வேலை நிறுத்த போராட்டம், மறியல் போராட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நடந்துள்ளது. திண்டுக்கல் மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற மறியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி: ஜீவா தங்கவேல்
படங்கள் : எஸ்.பி.சுந்தர், அசோக்குமார், குமரேஷ்