இஸ்ரேல் நாட்டு உளவு பார்க்கும் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா, மம்தா பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்ஃபோன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த செல்ஃபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தப்பட்டுவருகிறது.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தைக் கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய பாஜக அரசின் முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்தக் கோரியும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடைபெற்றது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியம் தலைமையில், காமராஜர் சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்ட காங்கிரஸார், நேரு வீதி வழியாக ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டன முழக்கங்களை எழுப்பி சென்றனர்.
அவர்களை சட்டப்பேரவை அலுவலகம் அருகே ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து காங்கிரஸார் அங்கு மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், நீதி விசாரணை நடத்தக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், "நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசியை மென்பொருள் மூலம் உளவு பார்த்த விவகாரம் தேசத் துரோகச் செயல் ஆகும். இந்த நிகழ்வு கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து நடந்திருப்பதாக சொல்லப்படுவதால் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததிலுமே முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்கும் நமது நாட்டின் ரகசியங்கள் கசிந்திருக்கலாம்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கிய நிலையில், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய பெண்ணின் செல்லிடப்பேசியும் உளவு பார்க்கப்பட்டிருப்பதால்தான் பாஜக இந்த உளவு வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே பெகாசஸ் விவாகரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
இந்த பேரணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், மாநில துணைத்தலைவர்கள் பீ.கே. தேவதாஸ், பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் நீல. கங்காதரன், ஆர்.கே.ஆர். அனந்தராமன், சிறப்பு அழைப்பாளர் சுந்தரவடிவேலு, பொதுச் செயலாளர்கள் கலாநிதி, அப்துல்ரகுமான், மகளிரணி தலைவர் மச்சகாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.