காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததில் பா.ஜ.க.வோடு அதன் கூட்டணிக் கட்சிகளும் பக்கபலமா நின்னுது. அதோடு பி.எஸ்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்தது. அ.தி.மு.க.வும் பா.ஜ.க. வழியில் நின்று இதை ஆதரிக்க வேண்டும் என்று சென்னையிலிருந்து உத்தரவு போனதா ஒரு தகவல் பரவியது. இது பற்றி விசாரித்த போது, அ.தி.மு.க.வுக்கான உத்தரவெல்லாம் டெல்லியிலிருந்துதான் வருது. பா.ஜ.க. கொண்டு வரும் சட்டதிட்டங்களை ஆதரிக்கலைன்னா என்ன ஆகும் என்பதை முத்தலாக் விவகாரத்திலேயே அ.தி.மு.க. நல்லா உணர்ந்திடிச்சி.
பா.ஜ.க. அரசு ராஜ்யசபாவில் கொண்டுவந்த முத்தலாக் சட்ட திருத்த மசோதாவை, அ.தி.மு.க. எம்.பி..யான நவநீதகிருஷ்ணன் கடுமையா எதிர்த்துப் பேசினார். இதை பார்த்த அமித்ஷா, மத்திய அமைச்சர் பியூஷ்கோயலைக் கூப்பிட்டு, அ.தி.மு.க. உறுப்பினர் என்ன பேசறார்? முதல்ல நமக்கு எதிரா வாக்கைப் பதிவு பண்ணாமல், அவங்க எம்.பி.க்களை வெளி நடப்பு பண்ணச் சொல்லுங்க. இல்லைன்னா, தமிழக அமைச்சர்கள் வீட்டை ரெய்டு செய்து நாம் எடுத்த அஸ்த்திரங்கள் எல்லாம் ரெடியா இருக்கு. அதிலே ஒருத்தர் வசமா சிக்கியிருக்காரு. அதை வச்சி எல்லாரையும் பிடிச்சி உள்ளே போட்டுடுவோம்ன்னு சொல்லுங்கன்னு கர்ஜனை செய்தாராம்.
இந்தத் தகவல் அமைச்சர் தங்கமணி காதுக்குப் போக, அவர் நவநீதகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு, வெளிநடப்பு செஞ்சிடுங்கன்னு சொல்லிவிட்டார். அதனால்தான் முத்தலாக் மசோதாவை பா.ஜ.க.வால் நிறைவேத்த முடிஞ்சிது. அதனால் இப்ப காஷ்மீர் விவகாரத்தில் மறுபடியும் அமித்ஷாவின் கோபத்தை எதுக்கு சம்பாதிக்கணும்னு நினைச்சிதான், அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வின் நடவடிக்கையை எடுத்த எடுப்பிலேயே ஆதரிச்சிப் பேசியிருக்காங்கனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.