தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன. மேலும் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமலும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இன்னும் கூட்டணிகள் குறித்தும் தொகுதிகள் குறித்தும் உறுதியாகாத நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கி நடத்திவருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி தமிழகம் வந்து தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவிலும் பங்கேற்றார். இதில் பா.ஜ.க.வுடனான அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் அமித்ஷா முன்னிலையில் கூட்டாக அறிவித்தனர். ஆனால், அதனைத் தொடர்ந்து பேசிய அமித் ஷா, அதுதொடர்பாக ஏதுவும் கருத்து கூறவில்லை. அதேபோல், பா.ஜ.க. முன்னணி தலைவர்கள், முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க மறுத்து வருகிறார்கள்.
வரும் 14ம் தேதி ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா தமிழகம் வர இருப்பதாகவும் அவர் ரஜினியைச் சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழகத்திற்கு வரவிருந்த பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தனது விசிட்டை கேன்ஸல் செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘துக்ளக்’ பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்க வரவிருந்த அமித் ஷா, இந்த விசிட்டின்போது எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால், திடீரென தனது விசிட்டை கேன்ஸல் செய்தது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் மோதல் என்கிற விமர்சனத்தை அதிகப்படுத்தியுள்ளது.