நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
மேலும் அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அதன்படி டெல்லியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அடிசி, பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தொகுதிப் பங்கீடு ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு மிரட்டல் வந்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறாவிட்டால் சிபிஐயிடம் இருந்து 41 ஏ பிரிவின் கீழ் சம்மன் அனுப்பப்படும் என மிரட்டுகின்றனர். இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறாவிட்டால் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவார் என செய்தி வந்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையைக் கண்டு பாஜகவும், பிரதமர் மோடியும் மிரண்டு போய் உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.