‘’என்னது நான் தலைமறைவாக இருக்குறேனா? என்னைய கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கா? அது சம்மந்தமா எனக்கு எதுவும் தெரியாதே!’’என தனக்கே உரிய நக்கல் பாணியில் திருக்கடையூர் கோயிலுக்கு வந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீசாருக்கும், எச்,ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின் போது உயர்நீதிமன்றத்தையும், தமிழக போலீசாரையும் தகாத வார்த்தைகளால் வசைபாடினார் எச்.ராஜா. அந்த வீடியோ வைரலாகி பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. அந்த சர்ச்சை பேச்சின் தாக்கம் முடிவுக்கு வருவதற்குள் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களையும் இழிவாக பேசி மேலும் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டார் எச்.ராஜா.
ஏற்கனவே பல்வேறு சர்ச்சைக்குறிய பேச்சை பேசி பல தரப்பிலும் எதிர்ப்பை சம்பாதித்திருந்த ராஜாவிற்கு இந்த இரண்டு விவகாரங்களும் சேர்ந்துகொண்டது. எச்,ராஜாவை கண்டித்து அறநிலையத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததோடு, புகார்களும் கொடுக்கப்பட்டன. அந்த வகையில் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எச்,ராஜாவை கைது செய்ய தமிழக அரசு பத்து காவலர்கள் கொண்ட இரண்டு தனிப்படையை அமைத்து தேடிவருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் கோயிலுக்கு 22 ம் தேதி வந்திருந்தார். அப்போது எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து இப்படி கூறினார்....
“ என்னது நான் தலைமறைவாக இருக்கேனா? என்னை கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டிருக்காங்களா? அது குறித்து எனக்கு எதுவும் தெரியாதே!.
தமிழகத்தில் ஒரு கோயிலில் கூட முறையாக சொத்துக்கள் பராமரிக்கப்படவில்லை. தமிழக கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் 82% கொள்ளையடித்துள்ளனர். இந்து சமுதாயத்தின் வழிபாட்டு உரிமைகள் அழிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 10 ஆயிரம் இந்து கோயில்கள் காணாமல் போய்விட்டன.
ஆகம விதியை காரணம் காட்டி திருநெல்வேலி தாமிரபரணியில் நடக்கவுள்ள புஷ்கர விழாவிற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது. கோயில்களின் ஆகம விதிமுறைகளில் தலையிட இந்து சமய அறநிலையத்துறைக்கு உரிமையில்லை. சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப்படுத்தினர். அது ஆகம விதிக்கு உட்பட்டது .ஆனால் தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு மட்டும் சிலைகளை அனுமதிக்காதது ஏன் என்பது புரியவில்லை,"
என்றார் வழக்கமான தடாலடி பேச்சால்.