ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் அதிமுகவில் தலையெடுத்து தற்பொழுது இது தொடர்பான வழக்குகள் நிலுவையிலிருந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை எடுத்து வைத்தார். கட்சி விதிப்படி ஒற்றைத் தலைமைக்கு மாறியது கட்சி விதிகளுக்கு முரணானது என்பதும் ஓபிஎஸ் உட்பட நான்கு பேரை நீக்கியது சட்டவிரோதமானது என்பதும் மேல்முறையீடு செய்தவர்கள் வைக்கும் வாதமாகும். இது முற்றிலும் தவறானது. கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டுதான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கட்சியினுடைய விதிகளின்படி பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது. அனைத்து முடிவுகளும் எடுப்பதற்கு பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருப்பதாகவும். கட்சியினுடைய உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு பொதுக்குழு தான். கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை உறுப்பினரிடம் கேட்டுதான் எடுக்க முடியும் என்ற வாய்ப்பு இல்லை. அதற்காகத்தான் பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து கிளைகளிலும் இருந்துதான் வந்திருக்கிறார்கள். எனவே பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என வாதங்களை வைத்தார்.