நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (20.03.2024) நடைபெற்றது. தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரடியாகத் தொகுதிகளுக்குச் சென்று மக்கள் மற்றும் சிறு, குறு வணிகர்கள் கருத்துகளைக் கேட்டு அதன்படி தேர்தல் அறிக்கை தயாரித்திருப்பதாக அறிவித்திருந்தார். கனிமொழி சார்பில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வாசித்தார். அதன் அடிப்படையில் வெளியான பட்டியலில் தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், வடசென்னை - கலாநிதி வீராசாமி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர். பாலு, அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், தஞ்சை - முரசொலி, தருமபுரி - ஆ.மணி, ஆரணி - எம்.எஸ். தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - மலையரசன், காஞ்சிபுரம் - செல்வம், சேலம் - டி.எம். செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ், நீலகிரி - ஆ. ராசா, வேலூர் - கதிர் ஆனந்த், கோவை - கணபதி ராஜ்குமார், திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை, பெரம்பலூர் - அருண் நேரு, பொள்ளாச்சி - கே. ஈஸ்வரசாமி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் என 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுத்தாக்கல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர்களுடன் வரும் 22 ஆம் தேதி கலந்தாலோசனை கூட்டம் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல் படி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘மார்ச் 22 ஆம் தேதி திருச்சி - பெரம்பலூர் தொகுதியிலும், மார்ச் 23 ஆம் தேதி தஞ்சை - நாகை தொகுதியிலும், மார்ச் 25 ஆம் தேதி கன்னியாகுமரி - திருநெல்வேலி தொகுதியிலும் மார்ச் 26 ஆம் தேதி தூத்துக்குடி - இராமநாதபுரம் தொகுதியிலும், மார்ச் 27 ஆம் தேதி தென்காசி - விருதுநகர் தொகுதியிலும், மார்ச் 29 ஆம் தேதி தருமபுரி - கிருஷ்ணகிரி தொகுதியிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலம் - கிருஷ்ணகிரி தொகுதியிலும் மார்ச் 31 ஆம் தேதி ஈரோடு - நாமக்கல் - கரூர் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
மேலும் ஏப்ரல் 2 ஆம் தேதி வேலூர் - அரக்கோணம் தொகுதியிலும், ஏப்ரல் 3 ஆம் தேதி திருவண்ணாமலை - ஆரணி தொகுதியிலும், ஏப்ரல் 5 ஆம் தேதி கடலூர் - விழுப்புரம் தொகுதியிலும், ஏப்ரல் 6 ஆம் தேதி சிதம்பரம் - மயிலாடுதுறை தொகுதியிலும், ஏப்ரல் 7 ஆம் தேதி புதுச்சேரி தொகுதியிலும், ஏப்ரல் 9 ஆம் தேதி மதுரை - சிவகங்கை தொகுதியிலும், ஏப்ரல் 10 ஆம் தேதி தேனி - திண்டுக்கல் தொகுதியிலும் ஏப்ரல் 12 ஆம் தேதி திருப்பூர் - நீலகிரி தொகுதியிலும், ஏப்ரல் 13 ஆம் தேதி கோவை - பொள்ளாச்சி தொகுதியிலும், ஏப்ரல் 15 ஆம் தேதி திருவள்ளூர் - வடசென்னை தொகுதியிலும், ஏப்ரல் 16 ஆம் தேதி காஞ்சிபுரம் - திருபெரும்புதூர் தொகுதியிலும், ஏப்ரல் 17 ஆம் தேதி தென்சென்னை - மத்திய சென்னை தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.