"கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சிகளுக்கும் பேரூராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கினாங்க, ஆனால் அந்த நிதியை தனக்கு தானே ஒதுக்கி கொண்டார் அந்தத் துறையின் அமைச்சர். இதற்கான ஆதாரம் தான் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சொத்து 110 கோடியை அரசு முடக்கியிருப்பது" என தனக்கே உரிய பாணியில் அதிமுகவையும், பாஜகவையும் நக்கலடித்து பேசினார் மன்னார்குடியில் முத்தரசன்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை முடிவடையும் நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள நகராட்சியில் 33 வார்டுகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது, “அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளாக நகர்ப்புற தேர்தலை நடத்தவில்லை. ஆனால் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர்செல்வம், பாஜக அண்ணாமலையும் கத்தி வருகின்றனர். ஆனால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கும் நிதி ஒதுக்கினாங்க. ஆனால் ஆட்சியாளர்கள் நிதியை ஒதுக்கிக்கொண்டார்கள். இதற்கான ஆதாரம் அந்தத் துறையில் இருந்த அமைச்சர் வேலுமணியின் சொத்து 110 கோடியை அரசு முடக்கியது. அரசு, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் 12 ஆயிரம் பேருக்கு வேலை என சொல்வது தான் அந்த கட்சியின் பெருமை. ஒரு அமைச்சர் சொல்கிறார்; ‘பாஜகவும் அதிமுகவும் கணவன் மனைவி மாதிரி’ என்று, வேறு ஒரு அமைச்சர் சொல்லுகிறார்; ‘பாஜகவுடன் சேர்ந்ததால் தான் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தோம்’ என்கிறார். அவர்களுக்குள் புரிதல் இல்லை.
பாஜக நாட்டிற்கு நல்லது அல்ல மக்களுக்கு விரோதமானது. கர்நாடகத்தில் ஒரு அமைச்சர் சொல்லுகிறார், ‘தேசிய கொடியை இறக்கிவிட்டு காவி கொடியை ஏற்றுவோம்’ என்று, இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. தொடர்ந்து பாஜக கட்சி சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதனை கிள்ளியெறிய வேண்டும்" என பேசிமுடித்தார்.