அதிமுக சார்பில் ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது எனத் தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பினை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வரவேற்று கொண்டாடினர்.
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் அதிமுகவின் உறுப்பினர் வைரமுத்து ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முன்னதாக தங்கள் தரப்பிடம் கருத்து கேட்காமல் எந்த தீர்ப்பையும் வழங்கக்கூடாது என தெரிவிக்கும் வகையில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.