அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், இன்று (15.12.2021) முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோர் இல்லங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, கர்நாடகா, ஆந்திரா என மொத்தம் 69 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணி மகன் தரணிதரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல் சேலம் ரெட்டிபட்டியில் உள்ள அஷ்வா பார்க் ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வசந்தி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. வேலூரில் காட்பாடி அருகே செங்குட்டையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
தங்கமணி அமைச்சராக இருந்த துறையில் ஊழல் நடந்திருப்பது மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரை மையமாக வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த சொத்துப்பட்டியல் விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. இதன் அடிப்படையில், 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. இந்த சோதனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கமணி சார்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.