விஜய் நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிலர் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நோக்கத்தில் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளார் எனவும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. மக்களுக்கு பணியாற்றி சிறைக்குச் சென்றவர்களை ஓரம் கட்டிவிட்டு மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என நடிகர்கள் நினைக்கிறார்கள். கேரளாவில் நடிகர் மம்மூட்டி, கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் என பலர் சினிமா புகழை பயன்படுத்தவில்லை. அரசியலுக்கு வந்து மக்களை கவர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கருத்தியல் சார்ந்து களப்பணியாற்றி அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் வரவேற்கிறோம். நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். பொதுவாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழகத்தில் மட்டும்தான் மார்க்கெட்டை இழக்கும் நேரத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள்.'' என்றார்.