2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் மிக பரபரப்பாக நடந்து முடிந்து, புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்று பல்வேறு ஆக்கப் பணிகளை செய்ய துவங்கியுள்ள நிலையில், தற்போது திமுக அமைச்சரவையில் உள்ள ஒரு சில மூத்த நிர்வாகிகள் தாங்கள் எதிர்பார்த்த துறை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதில், திருச்சியில் 9 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த அமைச்சர் கே.என். நேரு, அவர் எதிர்பார்த்திருந்த உள்ளாட்சித் துறையில் நகர்புறம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இரண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்தத் துறையை இரண்டாகப் பிரித்து நகர்ப்புற வளர்ச்சியை நேருவுக்கும் ஊரக வளர்ச்சித் துறையை அமைச்சர் பெரியகருப்பனுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
என்னளவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த திமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் அவருக்கு சால்வை அணிவிக்கச் சென்றபோது, “என்ன பெரிய அமைச்சர் பதவி கொடுத்துட்டாங்க. நான் எதிர்பார்த்த ஊரக வளர்ச்சித் துறை என்கிட்ட இல்லை” என்று தன்னுடைய சலிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே திமுகவின் மூத்த உறுப்பினரான துரைமுருகன், அவர் தன்னுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை வழங்கப்பட்டு அவரை திமுக தலைமை சரி செய்திருக்கிறது. கே.என். நேருவின் எதிர்பார்ப்பைக் கூடுதல் பொறுப்பு கொடுத்து சரி செய்ய நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்ற ஐ. பெரியசாமிக்கு கூட்டுறவு துறையை மட்டும் கொடுத்துள்ளதாக திமுக மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இவருக்கும் கூடுதல் துறையை ஒதுக்க நிர்வாகிகள் தலைமையிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த மூத்த அமைச்சர்களின் எதிர்பார்ப்பை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என்று தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.