இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. அதேபோல், தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. பல மாவட்டங்களில் தொற்று பாதித்தவர்கள் ஆம்புலன்ஸில் பல மணி நேரம் காத்திருந்து அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நேற்று (14.05.2021) தொகுதியில் கரோனா சிகிச்சை, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெரும்பான்மையான இடங்களில் கரோனா சிகிச்சை அளிப்பதற்கான போதுமான இட வசதிகள் இல்லாத நிலை இருந்தது. அதனைத் தொடர்ந்து, கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய இடங்களைக் கண்டறிய ஆய்வுசெய்தார்.
அந்த ஆய்வின்போது, இனாம் குளத்தூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்ததைக் கண்ட அவர், அதிகாரிகளை அழைத்து, அந்தக் கட்டடத்தை உடனடியாக சீரமைக்கச் சொன்னார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஐந்து மணி நேரத்தில், பாழடைந்திருந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையம் புத்தம் புதிய கட்டடமாக பொலிவுபெற்றது. தற்போது கரோனா சிகிச்சை அளிக்கக்கூடிய கட்டடமாக மாறியுள்ளது.
இது மட்டுமின்றி, மேலும் இதுபோல் பயன்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய அனைத்து கட்டடங்களையும் சரிசெய்து ஓரிரு நாட்களுக்குள் சிகிச்சை மையங்களாக தயார் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கையால் அத்தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.