தமிழ்நாட்டில் 2021ஆம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து அதிமுக தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அதிமுக கூட்டணியில் பாஜக 4 இடங்களை வென்றது.
அதிமுக அரசியலில் அதன் பொதுச்செயலாளரான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அக்கட்சி பெரும் சரிவுகளைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக அதன் தலைமை குறித்து அவ்வப்பொழுது பெரும் விவாதங்களும் எழுந்து வருகின்றன. அரசியல் விமர்சகர்களும், அதிமுகவை பாஜக தான் நிர்வாகம் செய்கிறது என்றும் பேசிவருகின்றனர். அதற்கேற்றார் போல், பாஜக தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலையும், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டுவருகிறது என்றும் தெரிவித்திருந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை அதிமுக அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அதிமுக மூத்தத் தலைவர் பொன்னையன், அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளப்படுவதை குறித்து வேதனை தெரிவித்திருக்கிறார். அந்தக் காணொளி தற்போது பரவிவருகிறது. அந்தக் காணொளியில் அவர், “அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் எனும் மறைமுக பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. இதில் நாம் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய தேவை இருப்பதால் நான் சொல்கிறேன். முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு என எதற்கும், தமிழ்நாட்டில் பாஜக குரல் எழுப்பவதே இல்லை. இது மக்களுக்கு புரிய வேண்டும். இதை தோழமைக் கட்சி எனும் முறையில் நாம் சொல்ல வேண்டாம். சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்கிறார். அவர் அருகிலேயே முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களும் அமர்ந்திருப்பது அந்தக் காணொளியில் தெரிகிறது.
அதிமுகவின் மூத்தத் தலைவர் ஒருவர் கட்சிக் கூட்டத்தில் இப்படி வேதனையுடன் பேசியது அக்கட்சியினரிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.