நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் வரும் 21-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த ஈவிஎம் எந்திரங்களை, சத்தமில்லாமல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவின் செய்தி தொடர்பாளரும், எம்.பியுமான டி.கே.எஸ் இளங்கோவன், தேர்தல் ஆணையருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "எந்தவித காரணமும் தெரிவிக்கப்படாமல், TN 72 AZ 7345 என்ற வாகனத்தில் 12-10-2019 அன்று நள்ளிரவு நேரத்தில் 30 ஈவிஎம் மின்னணு இயந்திரங்கள் நாங்குநேரியில் இருந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மின்னனு இயந்திரங்களை இடமாற்றுவதற்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடைமுறையை தேர்தல் அதிகாரிகள் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.