அ.தி.மு.க.வின் இளைஞர் மற்றும் இளம்பெண்களின் பாசறை அமைப்பு முன்னாள் மாநிலச் செயலாளரும் தற்போதைய கரூர் மாவட்டச் செயலாளருமான வி.வி. செந்தில்நாதன், இன்று அ.தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார்.
செந்தில்நாதன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. செந்தில் பாலாஜியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர். இந்த செந்தில்நாதனுக்கும் மாவட்ட அமைச்சரான விஜயபாஸ்கருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. செந்தில்நாதன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். இந்த நிலையில் திடீரென பா.ஜ.க.வில் ஐக்கியமாக முடிவு செய்து இன்று (28.01.2021) காலை சென்னையில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் முன்பு தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.
அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகி ஒருவர் பா.ஜ.க.வில் இணைந்தது கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியை பா.ஜ.க. தன் பக்கம் இழுத்தது, அ.தி.மு.க. தலைமைக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.