தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கடுத்த நாளே முதன்முறையாக வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. நேற்று (18.08.2021) கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தன் அறிமுக உரையில் பேசியதாவது, “அனிதாவில் துவங்கி, 14 மாணவ, மாணவியர் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர்.
பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், நீட் தேர்வு வேண்டாம் என்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார். நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை, ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அரியலூரில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயரைச் சூட்ட வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது, கடந்த ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்” என பேசினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “பிரச்சனையில் கட்சி பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்றுசேர்ந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆட்சிக்கு வந்தவுடனே, இது தொடர்பாக அலசி ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவரும் பணியை நிறைவேற்றி, அரசுக்கு அறிக்கையை அளித்துள்ளார். அந்த அறிக்கை சட்ட ரீதியாக பரிசீலிக்கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும்” என்றார்.