கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில், மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 09-ந் தேதி நடக்கவுள்ளது. இந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், பிப்ரவரி 22-ந் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால், அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளான தம்பிதுரையும், கே.பி.முனுசாமியும் ஆப்செண்ட்.
இன்னும் ஓயாத இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பிளவு அரசியல்தான், ஓ.பி.எஸ். ஆதரவாளரும், மா.செ.வுமான கே.பி.முனுசாமி இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கக் காரணம் என்கிறார்கள். ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது கே.பி.முனுசாமியின் எதிர்பார்ப்பு. அதேசமயம், தம்பிதுரை வராததற்கு சொந்தக்காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தனது சொந்த மாவட்டத்தில், தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க திட்டமிட்ட தம்பிதுரை, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அலைந்த நேரத்தில், எடப்பாடி ஒப்புதல் கொடுக்க மறுத்திருக்கிறார். இந்தச் சூழலில், முதல்கட்டமாக மத்திய அரசு ஆறு மருத்துவக் கல்லூரிகளை அறிவித்தது. அந்தப் பட்டியலில் கிருஷ்ணகிரி இடம்பெறாததைக் கண்டு மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தம்பிதுரை மீண்டும் முயற்சித்தார். ஆனால், திடீரென கூடுதலாக மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கியது. அதில் கிருஷ்ணகிரியும் இருந்ததால், நொந்துபோன தம்பிதுரை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை'' என்கிறார்கள் ர.ர.க்கள்.
அ.தி.மு.க. உள்ளடி அரசியல் ஒருபுறமிருக்க, கிருஷ்ணகிரி மாவட்ட எம்.பி. டாக்டர்.செல்லக்குமாரின் முயற்சியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்தம் கொண்டாடுவதாக தகவல் வெளியானது. தனது தேர்தல் வாக்குறுதியில் மருத்துவக்கல்லூரி கொண்டு வருவதாக செல்லக்குமார் அறிவித்திருந்தார். தொகுதி மக்களின் கோரிக்கையும் அதுவாகவே இருந்தது.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி பட்டியலை மத்திய அரசு கேட்டபோது, கிருஷ்ணகிரியையும் பரிந்துரைசெய்ய முதல்வரைச் சந்தித்துப் பேசினார் எம்.பி. செல்லக்குமார். ஆனால், அரசிடம் ரூ.400 கோடி நிதி இல்லையென கைவிரித்தார் எடப்பாடி. இதன்பிறகு, மத்திய அரசிடம் தொகுதி நிலவரத்தை செல்லக்குமார் எடுத்துரைத்த பிறகுதான், கிருஷ்ணகிரிக்கான ஒப்புதல் கிடைத்தது. இதற்குக் காரணமான எம்.பி. செல்லக்குமாரின் முயற்சியை முன்னிறுத்தாமல், பிள்ளை பெற்றாள் ஒருத்தி, பெருமை கொண்டாள் மற்றொருத்தி என்பதுபோல, முதல்வர் எடப்பாடி இப்போது அடிக்கல் நாட்டுகிறார்'' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இதுகுறித்து எம்.பி. செல்லக்குமாரிடம் கேட்டபோது, என்னை நம்பி வாக்களித்த தொகுதி மக்களின் நலனுக்காகவே போராடினேன். இதை அரசியலாக்க வேண்டாம். இதைக் காரணம் சொல்லி நிதியைத் தாமதப்படுத்துவதை நான் விரும்பவில்லை'' என்றார் பொறுமையாகவும் பெருந்தன்மையாகவும்.