தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி பணி தொடங்கவுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி விரைவில் முடிந்து நானே திறந்து வைப்பேன். கூடலூரில் பல ஆண்டுகளாக உள்ள நில பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பட்டா மற்றும் மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா. பசுமை திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு 800 கான்கிரீட் வீடு கட்டித் தரப்படவுள்ளது. கூடலூர் தொகுதியில் 8 அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டுள்ளன" என்றார்.