மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து மாநிலங்களவை சீட் வழங்க தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோரியிருந்த நிலையில், அதிமுக தலைமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுகவில் முனுசாமிக்கும், தம்பிதுரைக்கும் ராஜ்யசபா சீட் கொடுத்திருப்பதால் புதிய பிரச்சனை உருவாகி இருப்பதாக சொல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, தம்பிதுரையும், முனுசாமியும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளதால் மற்ற மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருவதாக கூறுகின்றனர். அதிமுகவில் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு கொடுத்து இருக்கமாட்டார். அப்படி கொடுத்தால் மற்ற மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவி கட்சிப் பணி செய்வதில் சோர்வடைந்து விடுவார்கள் என்று நினைப்பார். ஆனால் தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரை தேர்வு செய்துள்ளது தவறான உதாரணமாக மாறிவிட்டது என்கின்றனர். அதேபோல, கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகிய 2 பேரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது. அதோடு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தவர்களுக்கு அதிமுகவில் ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளதால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.