நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதே போல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதியில் 9 இடங்களை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. மீதமுள்ள 13 இடங்களையும் திமுக கைப்பற்றியது. திமுக கைப்பற்றிய இந்த 13 இடங்களும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளாகும். அதிமுகவின் இந்த தோல்விக்கு உட்கட்சி பூசல் தான் காரணம் என்று அக்கட்சியினரே கூறும் அளவுக்கு வந்துவிட்டது. தினகரன் கட்சியிலிருந்து வெளியேறும் சில முக்கிய தலைவர்களும் அதிமுகவில் இணையாமல் திமுகவில் இணைந்து வருகின்றனர். இதற்கும் அதிமுகவில் தலைமையில் இருக்கும் கோஷ்டி பூசல் தான் காரணம் என்று கூறுகின்றனர்.
இது பற்றி விசாரித்த போது, செந்தில்பாலாஜி தினகரன் கட்சியிலிருந்து வெளியேறியதும் அவரை அதிமுகவில் இணையக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டவர் எடப்பாடி என்கின்றனர். செந்தில் பாலாஜியை அதிமுகவில் இணைத்தால் கொங்கு மண்டலத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கு பாதிக்கப்படும் என்பதால் அவரை கட்சியில் சேர விடாமல் எடப்பாடி தடுத்து விட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் கட்சியில் இருந்து வெளி வந்ததும் அதிமுகவில் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் திமுகவில் நேற்று இணைந்து கொண்டார். தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைத்தால் தேனி மாவட்டத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கு பாதிக்கப்படும் என்று ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நினைத்ததால் அதற்கு ஓபிஎஸ் தடை போட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வந்தால் தனக்கு இருக்கும் செல்வாக்கு பாதிக்கப்படும் என்று அதிமுக தலைமையே நினைப்பதால் கட்சிக்கு அது பலவீனமாக அமையும் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர். இது பற்றி தொண்டர் ஒருவர் கூறும் போது, கட்சி தலைமைக்குள்ளும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையே இருக்கும் உட்கட்சி பூசலால் அதிமுகவில் இருந்து சென்றவர்கள் அதிமுகவில் இணையாமல் திமுகவில் இணைந்து வருகின்றனர். இப்படியே சென்றால் கட்சி மிகவும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று மிக கோபமாக தெரிவிக்கின்றனர்.